லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல் என்றால் கோபப்படுவது என் ஸ்டைல்.. விஜயகாந்த்

Posted by:
Updated: Friday, August 3, 2012, 14:04 [IST]

Vijayakanth
தேனி: எனக்கு கோபம் வரத்தான் செய்யும். நான் கோபக்காரன்தான். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும். கோபப்படுவது எனது ஸ்டைல் என்றால் லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல் என்று பேசியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தமிழக சுற்றுப்பயணத்தில் இறங்கியுள்ள விஜயகாந்த் தேனியில் நடந்த நாட்டுப்புற கிராமியக் கலைஞர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

ஒவ்வாரு மாவட்டமாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறேன். இந்த மாதம் ஒவ்வொரு நாளையும் குறித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறேன். மக்களையும் சந்திக்க வேண்டும், மக்களின் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும் என்று தான் வந்தேன். இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது கட்சிக்காரர்கள், தொண்டர்கள் உழைத்து சம்பாதித்த பணம்.

ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். நாங்கள் தொண்டர்களின் சொந்த பணத்தில் உதவிகள் செய்கிறோம்.

ஏழை மக்கள் வறுமையில் வாடும் போது, கொடநாட்டில் முதல்வர் ஓய்வெடுக்கிறார். வெறும் அறிக்கையில் ஆட்சி நடத்துகிறார்கள்.

குமுளிக்கு நான் அடிக்கடி வந்துள்ளேன். கேரள மருத்துவ கழிவுகளை, குமுளியிலும், பொள்ளாச்சியிலும் கொட்டுகின்றனர். இந்தக் கழிவுகளால் மக்களுக்கு நோய் ஏற்படுகிறது. அதற்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் இல்லை. இதை கேட்க ஆள் கிடையாது.

முல்லை பெரியாறு அணை பிரச்சனை தீர்க்கப்படாததால், 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக முதன்முதலில் போராடியவன் நான். தண்ணீர் கொள்ளை, கனிம வளம் கொள்ளை, எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம். விலைவாசி உயர்ந்துள்ளது.

ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளனர். இதில் ஒரு லட்சம் பேருக்காது வேலை கொடுக்க முடியுமா.

விஜயகாந்த் கோபப்படுகிறான், என்று சொல்கிறார்கள். கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். விஜயகாந்த் எதற்கும் பயப்பட மாட்டான். எதிர்த்து பேசினால் என்ன செய்வீர்கள். சிறை செல்லவும் தயார்.

என்னை தெருவை கூட்டச் சொன்னால் கூட கூட்டுவேன். மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். இங்கே மேடையில் ஆடிய கலைஞர்களை பார்க்கும் போது பெருமையாக இருந்தது. அதே சமயம் வேதனையாக இருக்கிறது. நானும் கலைஞனாக இருந்து தான் வந்தேன். நடிப்பதற்காக கெஞ்சினேன். நாடகத்தில் நடிப்பதற்காக 6 மணிக்கே மேக்கப் போட்டுவிட்டு உட்கார்ந்து இருப்பேன். நான் நிறைய கஷ்டப்பட்டேன். அசிங்கப்பட்டேன். கேவலப்படுத்தப்பட்டேன். புலி வேஷம் போட்டு அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் நடித்தேன்.

எனக்கு சம்பாதிக்கும் எண்ணம் மட்டுமே இருந்திருந்தால் எப்போதோ கைநீட்டி இருப்பேன். என் தொண்டர்கள் எந்த கடையிலாவது விழா நடத்த நோட்டு நீட்டி இருப்பார்களா? இல்லை.

மக்களுக்கு நன்மை செய்தால் கும்பிடும் முதல் ஆள் நான் தான். தி.மு.கவும், அ.தி.மு.கவும் நாட்டை முழுவதும் பாழ்படுத்தி விட்டனர். காவல் துறையை கண்டு மக்கள் ஓடுகின்றனர். நான் ஆட்சிக்கு வந்தால் போலீசார் லஞ்சம் வாங்க முடியாது. படித்த போலீஸ் அதிகாரிகள், பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். எதற்கு எடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள். ஓகோ என்று இருக்க வேண்டிய மக்கள் ஓ... என்று அழுகின்றனர்.

மணல் கொள்ளையால் ஒரு தனிப்பட்ட மனிதன் சம்பாதிக்கிறான். மக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கி ஆப் செய்ய நினைக்கிறார்கள். இந்த வருடம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். அவர்களில் 1 லட்சம் பேருக்காவது வேலை வாய்ப்பு கொடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை.

விஜயகாந்த்தை உள்ளே போட்டால் போடுங்கள். நான் பழைய சோறு, வெங்காயம் சாப்பிட்டு பழக்கப் பட்டவன். எனக்கு சாப்பாடு, படுக்கை முக்கியமில்லை. எதையும் எதிர்கொள்ளும் தைரியம் இருக்கு. நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்.

2016-ல் தே.மு.தி.க. ஆட்சிக்கு வரும். தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் மக்களை தங்கத் தட்டில் வைத்து தாங்குவேன். அடிக்கிற வெயிலுக்கு ஏசி வைத்திருப்பது தவறா? அந்த ஏசிக்கு கரண்ட் கொடுக்க முடியவில்லை. 40 ரூபாய் கட்டிய மின்சார கட்டணம் 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.

16 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு குறித்து முன்னாள் கலெக்டர் சகாயம் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு உங்களின் பதில் என்ன.

வருகிற எம்.பி., தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும். நில அபகரிப்பு என்று கைது செய்கிறீர்கள். நாளை இந்த சட்டம் உங்களுக்கும் திரும்பும்.

நான் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். டாஸ்மார்க் பிரச்சனையில் மக்கள் கருத்து கேட்டு முடிவு எடுப்பேன். ஓட்டு போடாமல் மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தால் சந்தோஷம் அடைவேன் என்றார் விஜய்காந்த்.

Story first published: Friday, August 03, 2012, 09:44 [IST]
உடனுக்குடன் செய்திகளை படிக்க Oneindia Tamil App டவுன்லோட் செய்க Android IOS