ஊதிய உயர்வுகோரி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 3,000 பேர் காலவரையற்ற ஸ்டிரைக்

Posted by:
Published: Tuesday, July 17, 2012, 11:41 [IST]

Rubber
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 3,000 பேர் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதில் பிரச்சனை நீடிக்கிறது. இதனால் தற்போது இடைக்கால ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அடிப்படை சம்பளமாக மாதம் ரூ.13,500 வழங்கக் கோரி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து வனத்துறை அமைச்சர் பச்சைமால் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தள்ளி வைத்தனர். எனினும் ஊதிய உயர்வு பிரச்சனையில் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 5 கோட்டங்களில் பணிபுரியும் 3,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் ரப்பர் மரங்களில் பால் வெட்டும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் 25 டன் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது தவிர ரப்பர் தொழிற்சாலை பணிகளும் முடங்கியுள்ளன.

Story first published: Tuesday, July 17, 2012, 11:41 [IST]
உடனுக்குடன் செய்திகளை படிக்க Oneindia Tamil App டவுன்லோட் செய்க Android IOS