குடியரசுத் தலைவர் தேர்தல்: பி.ஏ.சங்மாவும் மனுத்தாக்கல் செய்தார்

Posted by:
Published: Thursday, June 28, 2012, 14:53 [IST]

PA Sangma
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் போட்டியிடும் மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா இன்று பிற்பகல் 2.31 மணிக்கு தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

பி.ஏ.சங்மா வேட்புமனுத்தாக்கலின் போது பாஜக சார்பில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி, வசுந்தராஜே சிந்தியா, அனந்தகுமார், ராஜ்நாத்சிங் அதிமுக எம்.பி. தம்பிதுரை, பிஜூ ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிஷா முதல்வருமான நவீன் பட்நாயக், அகாலி தளத் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்புமனுத்தாக்கலின் போது செய்தியாளர்களிடம் பேசிய சங்மா, இந்தியப் பழங்குடிகள் கூட்டமைப்பு சார்பில் என்னுடைய வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஒடிஷா முதல்வர்களால் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும் இதுகாலம் வரைக்கும் காங்கிரஸ் கட்சி பக்கமே நாட்டின் பழங்குடி மக்கள் இருந்து வந்துள்ளனர். ஆகையால் பழங்குடி இன வேட்பாளரான என்னை காங்கிரஸ் ஆதரிக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஆதரிக்கவில்லை. இதற்கான எதிர்வினையை அவர்கள் சந்திக்க நேரிடும் என்றார் அவர்.

முன்னதாக இன்று காலை பிரணாப் முகர்ஜி தமது ஆதரவு தலைவர்களுடன் இன்று காலை வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். ஜூலை 19-ந் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

Story first published: Thursday, June 28, 2012, 14:53 [IST]
உடனுக்குடன் செய்திகளை படிக்க Oneindia Tamil App டவுன்லோட் செய்க Android IOS