பிறந்த நாள் கொண்டாடும் 'ஷோமேன் ஆப் இந்தியா' இயக்குநர் ஷங்கர்!

Posted by:
Published: Friday, August 17, 2012, 14:13 [IST]

Shankar
சென்னை: பாலிவுட்டில், இந்தியாவின் ஷோமேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் ராஜ்கபூர். அவருக்குப் பிறகு அந்தப் பட்டத்தை மெகா படங்களை இயக்கிய சுபாஷ் கய்-க்குத் தந்தார்கள்.

ஆனால் இப்போது அந்தப் பெயரைத் தட்டிச் சென்றுள்ளவர் இயக்குநர் ஷங்கர்! தமிழ்நாட்டு திறமைகளை முழுசாகப் பயன்படுத்திக் கொண்டாலும், அதை பெரிதாகக் கொண்டாட விரும்பாத பாலிவுட்டே இதனை ஒப்புக் கொள்வதுதான் ஷங்கரின் சிறப்பு.

எஸ்ஏசந்திரசேகரின் உதவி இயக்குநராக திரையுலகில் நுழைந்த ஷங்கர், ஜென்டில்மேன் மூலம் இயக்குநரானார். முதல் படமே மெகா ஹிட்.

தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அன்னியன், சிவாஜி, எந்திரன், நண்பன் என 10 படங்களை தமிழில் இயக்கியுள்ளார். ஜென்டில்மேன் மற்றும் முதல்வன் படங்களை இந்தியில் ரீமேக் செய்துள்ளார்.

தமிழில் இவர் இயக்கிய அத்தனைப் படங்களுமே ஹிட்தான். பாய்ஸ் மட்டும் கொஞ்சம் சொதப்பிவிட்டது.

இந்திய சினிமாவில் உச்சகட்ட வசூலைக் குவித்த ரஜினியின் எந்திரன் - தி ரோபோ படத்தின் இயக்குநர் என்பதால், ஷங்கருக்கு பாலிவுட்டில் இன்று பெரிய மரியாதை. பல முன்னணி நட்சத்திரங்கள் அவரை அழைத்தாலும், அவர் தன் விருப்பப்படிதான் படங்களை இயக்கி வருகிறார்.

தற்போது விக்ரம் - எமி ஜோடியுடன் ஐ என்ற ரொமான்டிக் த்ரில்லரை உருவாக்கி வருகிறார் ஷங்கர்.

இன்று தனது 49வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஷங்கர். வாழ்த்துகள்!

Story first published: Friday, August 17, 2012, 14:13 [IST]
Topics: shankar ஷங்கர் தமிழ் சினிமா tamil cinema
உடனுக்குடன் செய்திகளை படிக்க Oneindia Tamil App டவுன்லோட் செய்க Android IOS