இன்று ரிலீசாகவிருந்த பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்துக்கு நீதிமன்றம் தடை!

Posted by:
Published: Friday, August 17, 2012, 10:53 [IST]

சென்னை: ராசுமதுரவன் இயக்கத்தில் இன்று வெளியாகவிருந்த பாண்டி ஒலி பெருக்கி நிலையம் என்ற படத்தை வெளியிட சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பைனான்சியர் எஸ்.சிவகுமார் இது தொடர்பாக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ் திரைப்படத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறேன். சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராசுமதுரவன் என்பவர், "பாண்டி ஒலி பெருக்கி நிலையம்'' என்ற தலைப்பில் தமிழ் சினிமா படம் தயாரித்து இயக்குகிறார்.

இந்த படத்தை தயாரிப்பதற்காக, என்னிடம் ரூ.24 லட்சம் கடனாக 21.2.2012 அன்று வாங்கினார். அப்போது, இந்த தொகையை 24 சதவீத வட்டியுடன், படம் ரிலீசாவதற்கு 30 நாட்களுக்கு முன்பு தந்து விடுவேன் என்று ராசுமதுரவன் உத்தரவாதம் அளித்தார்.

ஆனால் ஒப்பந்தம் செய்தபடி, பணத்தை திருப்பித்தராமல், படத்தை ஆகஸ்டு 17-ந் தேதி (இன்று) வெளியிடுவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளார். எனவே எனக்கு தரவேண்டிய ரூ.24 லட்சம், அதற்கான வட்டி ஆகியவற்றை தராமல் பாண்டி ஒலி பெருக்கி நிலையம் என்ற படத்தை வெளியிட ராசுமதுரவனுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு 8-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி ஜெ.கலியமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதி கலியமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், "ராசுமதுரவன் தயாரித்து, இயக்கும் பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படம் வெளியானால், தனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஆவணங்கள், வக்கீல் வாதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, இந்த படத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது தெரிகிறது. எனவே பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்துக்கு, வரும் ஆகஸ்டு 24-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிடுகிறேன். இந்த வழக்கு குறித்து எதிர்மனுதாரர் ராசுமதுரவன் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு வரும் 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

Story first published: Friday, August 17, 2012, 10:53 [IST]
Topics: tamil cinema pandi oliperukki nilayam பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
உடனுக்குடன் செய்திகளை படிக்க Oneindia Tamil App டவுன்லோட் செய்க Android IOS